புதிய அரசியலமைப்புக்கான நிபுணர்களின் வரைபு அடுத்த மாதம் 7ஆம் திகதி அரசியல் நிர்ணய சபையாக கூடவுள்ள நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக நேற்று இடம்பெற்ற வழிநடத்தல் குழுவின் கலந்துரையாடலின் இறுதியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வழமைக்கு மாறாக, காலை 9மணிக்கு கூடும் பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக இருக்கும். இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியல் அமைப்பு வரைபை முன்வைத்து உரையாற்றுவதுடன் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வரைபு பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த ஆண்டு நவம்பர் மாத்தில் உப குழுக்கள் அமைக்கப்பட்டு, அதே ஆண்டு நிர்ணய சபையில் சமர்பிக்க திட்டமிட்டபோதும், கட்சிகளின் இணக்கப்பாடு இன்மை காரணமாக அம் முயற்சி கிடப்பில் போடப்பட்டது.
இதேவேளை 2017ஆம் ஆண்டு நிர்ணய சபையில் இடைக்கால அறிக்கை சமர்பிக்கப்பட்ட போதும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காரணமாக அரசியலமைப்பு முயற்சிகள் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. ஒக்டோபர் 25ஆம் ஆதிகதி வரைபை நாடாளுமன்றில் சமர்பிக்க திட்டமிட்டபோதும் ஒக்டோபர்11ஆம் திகதி ஏற்பட்ட சில விவாதங்’கள் காரணமாக பிற்போடப்பட்டது.
இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதும் மகிந்த ராஜபக்ச அணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழப்பம் விளைவித்தபோதும் புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைபை நவம்பர் 7ஆம் திகதி சமர்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.