இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்க்ஸ இன்று பதவியேற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில் ஜனாதிபதியாக இலங்கை சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக பதவி வகித்தார். அந்தக் கட்சியின் போட்டிக்கட்சியான மஹிந்த ராஜபக்ஸவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருந்தது. ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் நீடித்து வந்தன.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, கூட்டணி அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதுடன் மஹிந்த ராஜபக்ஸ சற்று முன்னதாக ஜனாதிபதியின் முன்பாக புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவரது பதவிப் பிரமாணம் செய்த காட்சிகளை தொலைகாட்சிகள் ஒளிபரப்பின. நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகிக் கொள்வதாக இன்று மாலை அறிவித்தது. இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
அடுத்த மாதம் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தின் அடுத்த சந்திப்பு நடக்கவுள்ளது. அன்றைய தினம் ராஜபக்ஸ தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும். தற்போது மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றுள்ளமையானது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருவதாக அவரது தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஒரே பார்வையில் இலங்கை – ஒரு நாடு – ஒரு ஜனாதிபதி – இரண்டு பிரதமர்கள்…