ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டதையடுத்து ரூபவாஹினி சேவை நாடளாவிய ரீதியில் முடங்கியுள்ளது. நாட்டின் அரசியலில் ஏற்பட்ட பிரதமர் மாற்றத்தையடுத்து குறித்த கலவரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு முன்னாள் ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல சென்றதையடுத்து மோதல் நிலமை அமைதி நிலைக்கு சென்றுள்ளது. இதேவேளை தேசிய தொலைக்காட்சி வளாகத்திற்கு சென்ற அமைச்சர்கள் இருவர் மீது அங்குள்ள ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், அவர்களின் வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சியை கொண்டு வருவதற்கு பிரதான பங்களிப்பை வழங்கிய அமைச்சர் ஒருவர் மீதும் மேலும் ஒரு அமைச்சர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐரிஎன் என அழைக்கப்படும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணியாளர்கள் சிலர், ஒரு குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர்.
மகிந்த பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிகழ்வை ஒளிபரப்பாத காரணத்தினாலேயே அந்நிறுவனத்தை மகிந்தவின் ஆதரவாளர்கள் முடக்கியுள்ளனர். இந்நிலையில் அரச ஊடக நிறுவனங்களைச் சுற்றி இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.