141
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்த தமிழ் இலக்கிய விழாவின் நிறைவு நாள் நிகழ்வுகள் 27.10.2018 சனிக்கிழமை திருகோணமலை உவர்மலை விவேகானந்தக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றன.
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வளர்மதி ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் காலை அமர்வு ஊடகவியலாளர் சி.குருநாதன் அரங்கு எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதில் வரவேற்புரையை கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.எம். நியாஸ் வழங்கினார். அரங்கத் திறப்புரையை திருகோணமலை முத்தமிழ் மன்றத்தின் தலைவர் கலாநிதி இரா.ஸ்ரீஞானேஸ்வரன் ஆற்றினார்.
தொடர்ந்து சிறப்பு நிகழ்வாக யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தினர் வழங்கிய வழக்காடு மன்றம் இடம்பெற்றது. குற்றவாளிக் கூண்டில் இன்றைய இளைஞர்கள் என்ற பொருளில் இடம்பெற்ற இந்த வழக்காடு மன்றத்தில் வாதிகளாக சட்டத்தரணி ஜே.ரஞ்சித்குமார், விவசாய அமைச்சு உத்தியோகத்தர் ந.ஐங்கரன் ஆகியோரும் பிரதி வாதிகளாக பல்கலைக்கழக சிரேஸ்ட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா, சமூக சேவை உத்தியோகத்தர் வே.சிவராசா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். நீதிவழங்குநராக தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் பங்கேற்றார்.
நிகழ்வில் விருந்தினராக கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
Spread the love