இலங்கையின் அரசியலமைப்பை மதித்து தீர்வொன்றை காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஓன்றியத்தின் பேச்சாளர் அறிக்கையொன்றின் மூலம் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இலங்கையின் ஏனைய சர்வதேச நண்பர்களுடன் இணைந்து இலங்கையின் அரசியலமைப்பை மதிக்கும் தீர்வொன்றை விரைவில் காணுமாறு வலியுறுத்தும் நோக்குடன் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் சந்தித்தார் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் எனவும் இதன் மூலம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற முடியும் எனவும் ஐரோப்பிய ஓன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது நிச்சயமற்ற நிலமையும் பதற்றமும் காணப்படுகின்ற நிலையில் வன்முறையை தவிர்ப்பதும் சட்டத்தை அமுல்படுத்தும் மிகவும் முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.