புதிய அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நாவின் அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, ஐ.நா அமைதிகாக்கும் படையினர், இலங்கை இராணுவத்தை வீழ்த்திவிட்டே அரசாங்தை வீழ்த்த முடியும் எனவும் தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தில் இன்று (30.10.18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், தாம் அரசமைப்புக்குற்பட்டே செயற்படுவதாகவும், அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளினாலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்ததின்போது ஏற்பட்டிருந்த அசாதாரண நிலைமைகளிலும் கூட நாம் ஒருபோதும், ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் உதவியை கோரியிருக்கவில்லை எனவும், ஆனால், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் ஒத்துழைப்பு வேண்டும் எனக் கோரியிருப்பது தேசத்துரோகம் எனவும் தெரிவித்தார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது, 9 மாகாண சபைகளில் 6 மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளன. இரண்டரை வருடங்களுக்கு மேலாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாதிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களமும் இது தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
அமெரிக்கா பிரஜையான ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி சௌதி அரசாங்கத்தினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது வார்த்தைகளில் கவனம் செலுத்திய அமெரிக்கா, தற்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஜனநாயகம் தொடர்பில் சான்றிதழ் வழங்க முயற்சிக்கிறது எனவும் கூறினார்.
ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாடு சார்பு கொள்கைகளினாலேயே அவரை பாதுகாக்க அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றதாக குறிப்பிட்ட அவர், இலங்கை வரலாற்றில் இதுவரையில் 24 தடவைகள் நாடாளுமன்றம் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 24 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இருப்பதாகவும், ஆகவே தற்போது நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது முதன்முறையல்ல எனவும் எடுத்துரைத்தார்.
1 comment
‘சர்வதேசமே மிரண்ட புலிப்படையையே துவம்சம் செய்த இலங்கை இராணுவத்தின் முன் இந்த ஐ. நா பாதுகாப்புப் படை எந்த மூலைக்கு’, என்று திரு. வாசுதேவ நாணயக்கார சொல்ல வருகின்றாரோ?
நல்லாட்சி அரசில் சில மாகாணசபைத் தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படாமை
தவறேயெனினும், அதற்கு ஜனாதிபதியும் பொறுப்புக் கூறவேண்டியவராகின்றார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நல்லாட்சி அரசுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர், தான் 2015 ல் உறுதி வழங்கிய பல விடயங்களை செய்யாது விட்டமைக்கு யார் மீது பழியைப் போடப் போகின்றார்?
1987 ல் இலங்கை- இந்திய ஓப்பந்தம் கைச்சாத்தான பின்பு, இலங்கையின் ஏழு மாகாணங்களில் முதலாவது மாகாண சபைத் தேர்தல்கள் சித்திரை 1988 ல் நடைபெற்ற போதும், இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணத்தின் முதலாவது மாகாண சபைத் தேர்தல் கார்த்திகை 1988 ல் தான் நடத்தப்பட்டது. எனினும்,திரு. மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான UPFA ஆட்சிக் காலத்தில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண சபைகளுக்கும் நான்காவது மாகாண சபைத் தேர்தல்கள் 2004 ல் நடத்தப்பட்டிருந்த போதும், இலங்கை- இந்திய ஒப்பந்தத்துக்கு முரணாக வடக்கையும் கிழக்கையும் இரண்டு தனித்தனி மாகாணங்களாகப் பிரித்த பின், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முதன் முதலாக 2009 ல் தான் நடாத்தப்பட்டது. ஆக, திரு. மகிந்த ராஜபக்ஷ கூட, தான் பதவிக்கு வந்து 9 வருடங்களின் பின்புதான் வடமாகாணத்தின் முதலாவது மாகாண சபைத் தேர்தலை புரட்டாதி 2013 ல் தான் நடாத்தியிருக்கின்றார்.
நிலைமை இப்படியிருக்க, தேர்தல்கள் ஒத்திவைப்புக் குறித்துப் பேசும் தார்மீக உரிமை இவர்களுக்கு இருக்கின்றதா, என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.