நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு, ஜனாதிபதி யாரிடமும் கேட்கத் தேவையில்லை எனவும் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரம் உள்ளது எனவும் புதிய அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது, ஜனாதிபதி, இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் எனத் தெரிவித்த அவர் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் பூரண அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதென்பதை, நேற்றைய கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது, சபாநாயகரும் எற்றுக்கொண்டிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றம், எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் தற்போது நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் அடுத்ததாண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உத்தியோகப்பூர்வமற்ற வகையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டார் எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.