குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட மாகாணத்தின் ஆளுநர் மாற்றம் தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் அவ்வாறான மாற்றங்கள் தொடர்பில் தனக்கு இதுவரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
வடக்கு ஆளுநராக ரெஜினோல்ட் கூரே உள்ள நிலையில் தற்போதைய ஆளுநர் மாற்றப்பட்டு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
சிரேஸ்ர ஊடகவியியலாளர் என். வித்தியாதரன் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ் சுண்டிக்குழியில் உள்ள ஆளுநரின் செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போது ஆளுநர் மாற்றம் தொடர்பில் ரெஜினோல்ட் கூரேயிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்த ரெஜினோல்ட் கூரே மாகாணத்தின் ஆளுநர் மாற்றம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும், மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டால் தான் இங்கிருந்து செல்வதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதே வேளை ஊடகவியலாளர் சந்திப்புக்கு ஆளுநர் செயலகத்திலிருந்து உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவ்வாறான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் தீபாவளி வாழ்த்துக்களை மாத்திரம் சொல்ல உள்ளதாக கூறி வாழ்த்துக்களை தெரிவித்தக் கொண்டு வேறு விடயங்கள் தொடர்பில் பேசவோ அல்லது கேள்விகள் எழுப்பப்படுவதையோ தவிர்த்துக் கொண்டு உடனடியாக அச் சந்திப்பையும் முடித்துக் கொண்டார்.என்பது குறிப்பிடத்தக்கது.