167
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீடம் 1.11.2018 வியாழனன்று யாழ்ப்பாணத்தில் கூடியது. அதில் விவாதிக்கப்டப்ட விடயங்கள் குறித்து கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
நவம்பர் மாதம் முதலாம் திகதி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீட கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. கொழும்பில் திடீரென ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம், அதனுடைய ஜனநாயகத் தன்மை, இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள், பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டியதன் அவசியம், பாராளுமன்றத்தைக் கூட்டும்படி சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் விடுத்திருக்கும் வேண்டுகோள்கள் என அனைத்து விடயங்களும் அலசி ஆராயப்பட்டது.
தேசிய அரசாங்கத்திற்குள் எந்தவிதமான கலந்துரையாடல்களும் இன்றி திடீரென ஏற்படுத்தப்பட்ட இந்த அரசியல் மாற்றமானது நாட்டின் ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன், சட்டப்பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளது. 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தமானது ஆங்கிலமொழிமூலம் சரியானதா? சிங்களமொழிமூலம் சரியானதா என்ற அரசியல் சட்டசர்;ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இது இதுவரை பேசப்பட்டுவந்த புதிய அரசியல் சாசனத்தில் சிங்கள மொழியா? தமிழ் மொழியா இறுதியானது என்று ஏற்கனவே எழுந்திருந்த சிக்கலை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது. நீண்டநேரம் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தில் மேற்கண்ட சகல விடயங்களும் கருத்தில் எடுக்கப்பட்டது.
.இலங்கையில் ஏற்பட்டிருக்கக்கூடிய இத்தகைய நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தி வருகின்றன. ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தை நவம்பர் மாதம் பதினாறாம் திகதிவரை ஒத்திவைத்து ஏனைய கட்சிகளுடன் பேரம்பேசி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மையைக் காட்டுவதற்கான ஒரு கால அவகாசத்தை வழங்கினார். இது ஒரு ஜனநாயக அரசியலுக்கு விரோதமானது என்ற அடிப்படையில் பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டும்படி சகலநாடுகளும் வற்புறுத்தி வந்தார்கள். இந்தப் பேரம் பேசலில் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐந்துபேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துள்ளதுடன், இன்னும் பலபேருடன் பேரப் பேச்சுக்கள் நடைபெறுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இருநூற்றி இருபத்தைந்து பேரைக் கொண்ட பாராளுமன்ற அவையில் 113 அங்கத்தவர்களின் ஆதரவினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் இதனை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறும் என்பது யதார்த்தமானது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஏற்கனவே இருந்த அரசாங்கம் புதிய அரசியல் சாசன விடயங்களை இழுத்தடித்து வந்ததுடன், ஜெனிவா தீர்மானங்களையும் முழுமையாக நிறைவேற்றாமல் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் நடவடிக்கைகள் எடுக்காமலும் இருந்து வந்துள்ளது. அதுமாத்திரமல்லாமல், பொறுப்புக்கூறல் தொடர்பாக ஒரு விசாரணை ஆணைக்குழுவை அமைக்க மாட்டோம் என்று கூறிவந்ததுடன், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணிகள் விடுவிப்பு, வட-கிழக்கிலிருந்து மேலதிக இராணுவத்தை வெளியேற்றல் போன்ற பல விடயங்களிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் முன்னேற்றங்கள் இல்லை என்பதே வெளிப்படையானது.
இந்த நிலையில், இலங்கையினுடைய இன்றைய நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்குத் தலையிட்டிருக்கும் சர்வதேச சமூகமானது இந்த நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை நாட்டை மீட்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அதேசமயம், தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய காலகட்டம் இது. அதற்கான உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்வது அவசியமானதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கருதுகின்றது. ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்ற அடிப்படையிலும் எதிர்க்கட்சித் தலைவரென்ற அடிப்படையிலும் கொழும்பிலுள்ள சர்வதேச இராஜதந்திரிகளை ஒன்றாகச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான ஒரு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு சர்வதேச சமூகம் மத்தியஸ்தம் வகித்தோ அனுசரணை வழங்கியோ ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திரு. சம்பந்தன் அவர்கள் உறுதியுடன் முன்வைத்துச் செயற்பட வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோருகின்றது.
இன்றைய சூழலில், எதிர்வரும் ஐந்தாம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் என்று தெரியவருகிறது. நாட்டில் நிகழும் மாற்றங்களை எமது கட்சி மிகக் கரிசணையுடன் அவதானித்து வருகின்றது. சரியான தருணத்தில் சரியான முடிவினை மேற்கொள்வோம்.
ந.சிவசக்தி ஆனந்தன், பா.உ.
வன்னி மாவட்டம்
செயலாளர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
Spread the love