சிரியாவின் ராக்கா நகரில் பாரிய மனித புதைகுழி ஒன்றினுள் 1,500 பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி பஷார் அல் அசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகின்றது.
இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளும் கால் பதித்து ஆதிக்கம் செலுத்திவருகின்ற நிலையில் அவர்களைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அசாத்தின் ராணுவத்தினருக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்துகின்றன. அவ்வாறு நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அந்த நகரத்தில் பாரிய மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை விமானத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன
இதுவரை அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுடன் வான்தாக்குதல்கள் காரணமாக ராக்கா நகரின் 85 சதவீத பகுதி அழிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது