சபாநாயகர் கரு ஜயசூரிய, தான் விரும்பியவாறு நாடாளுமன்றத்தை கூட்டுவாராயின், அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு, ஆளும் தரப்பு ஆராய்ந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதியே விடுக்கவேண்டும்.
வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான இயலுமை, சபாநாயகருக்கு இல்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்தநிலையில் ஒத்திவைக்கப்பட்ட திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் முயற்சிகளை மேற்கொள்வதாக, செய்திகள் வெளியாகியிருந்ததனையடுத்தே, ஆளும்தரப்பு அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களை மீறி, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை எனவும் அதேபோன்று அரசியலமைப்பில், ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களை மீறிச் செயற்படுவதற்கு எவருக்கும் உரிமையில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது