மக்களால் தோற்கடிக்கப்பட்ட சர்வாதிகாரி ஒருவரிடம் நாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளித்திருப்பதாக தெரிவித்துள்ள கொழும்பு நகராதிபதி ரோசி சேனநாயக்கா, இயன்றால், பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுமாறும் சவால் விடுத்துள்ளார்.
62 இலட்சம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு வாக்களித்தது, மகிந்த ராஜபக்சவை பின் கதவால் பிரதமராக்குவதற்கு அல்ல எனக் குறிப்பிட்ட அவர், 18ஆவது அரசியல் திருத்தம் மூலம் ராஜபக்சவை மக்கள் தோற்கடித்து, மைத்திரியிடம் நாட்டை கொடுக்க, மைத்திரியோ அதே சர்வாதிகாரியிடம் நாட்டை திருப்பிக் கொடுத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்கள் வாக்களித்து, அதிகாரத்தை பெறுவதை விடுத்து, பணம் கொடுத்து அதிகாரத்தை பெறலாம் என்ற நிலை எதிர்காலச் சந்ததியை பாதிக்கும் செயல் எனத் தெரிவித்த அவர் , பதவிக்கு வந்து சில மணி நேரத்திலேயே ஊடகங்களை அடித்து நொருக்கி தனது சர்வாதிகாரக் குணத்தை மகிந்த ராஜபக்ச காண்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தம்மால் வெல்லப்பட்ட சர்வாதிகாரியை திட்டித் தீர்த்தே ஜனாதிபதி மைத்திரிபால ஜனாதிபதி பதவியை பெற்றுக் கொண்டார் எனவும் ஜனாதிபதியின் இன்றைய மாற்றம் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனால் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் எனவும் ரோசி மேலும் தெரிவித்தார்.