மனுஷ நாணயக்கார பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு ரணிலை சென்று சந்தித்தார்!
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான மனுஷ நாணயக்கார தனது பிரதியமைச்சர் பதவியில் இருந்து விலகியதுடன் அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் முகமாகவே பதவிவிலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றத்தை தொடர்ந்து தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக மனுஷ நாணயக்கார பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையில் மகிந்த பக்கம் சிலர் கட்சித் தாவலில் ஈடுபட்டுள்ள நிலையில் மனுஷ நாணக்கார பதவி விலகி ரணிலை சந்திருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் சட்டவிரோத அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளிற்கு துணைபோகக்கூடாது என்ற முடிவிற்கு வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மனுச நாணயக்கார தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது
மகிந்த ராஜபக்சவை நீங்கள் பிரதமராக நியமித்து பாராளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தியதை தொடர்ந்து கடந்த சில நாட்கள் குழப்பம் மிகுந்தவையாக காணப்படுகின்றன. அவ்வேளை நான் உங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன், நீங்கள் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு புதிய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக பணியாற்றும் அரசியல் முடிவையெடுத்தேன்
உங்களின் நடவடிக்கையினால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளை தெளிவுபடுத்தி சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையொன்றை வாசிக்க நேர்ந்தது. பதவிப்பிரமாணம் செய்துள்ள புதிய அரசாங்கத்தை எந்த உலகநாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது எனது ஜனநாயக மனச்சாட்சியை ஆழமாக சிந்திக்க தூண்டியுள்ளது. நான் எனது அரசியல் சகாக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னர் இவ்வாறான சட்டவிரோத அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளிற்கு துணைபோகக்கூடாது என்ற முடிவிற்கு வந்துள்ளேன். இதன் காரணமாக எனது ஜனநாயக- அரசியல் நம்பிக்கைகள் மற்றும் மனச்சாட்சியின் அடிப்படையில் நான் எனது இராஜினாமாவை சமர்ப்பிக்கின்றேன்.
2015 ஜனவரி 8 ம் திகதி தேர்தலில் உங்களிற்கு கிடைத்த ஆணையும் அதன் பின்னர் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதும் அதிகார துஸ்பிரயோகங்களையும் ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் ஒழி;ப்பதற்கே என்பதை நான் உங்களிற்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். இன்று முதல் நான் சபாநாயகரின் நிலைப்பாட்டை ஏற்று பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவையே ஏற்பேன் என தெரிவித்துள்ளார்.