குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவின் கிழக்கு அலெப்போவில் இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதுவர் விட்டலி சர்கின் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பிராந்தியத்தின் முழுமையான கட்டுப்பாட்டை சிரியாவின் படையினர் பெற்றுள்ளதுடன் இந்த பகுதிகளில் இருந்து சிரிய எதிர்கட்சிப் போராளிகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான உடன்படிக்கை ஒன்றும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை போராளிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு இராணுவ நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், சிரிய படையினர் வீடுவீடாக சென்று பொதுமக்களை சுட்டுக் கொல்வதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறு 80க்கும் அதிகமானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.