நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டிருந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் குறைந்த அளவிலேயே மாசு ஏற்பட்டுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தீபாவளி பண்டிகையின் போது காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியிருந்த போதும் ஒருசில இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் இந்தத் தீர்ப்பை மீறியதாகக் கூறி 100க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயித்ததால், இந்தாண்டு குறைந்த அளவிலேயே மாசு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், காற்று மாசுபாடு 65 குறியீடு பதிவாகியிருப்பதாகவும், டெல்லியில் சராசரி காற்று மாசு 349 குறியீடு எனவும் தெரிவித்துள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் டெல்லியில் காற்று மாசு மிகவும் அபாய அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களை விட சென்னையில் மிகவும் குறைந்த அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது எனவும் கடந்த ஆண்டு தீபாவளியன்று ஏற்பட்ட மாசை விட இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.