குடியேறிகள் தொடர்பான ஒரு புதிய சட்டத்தின்படி சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி அமெரிக்காவில் தஞ்சம் கோர உரிமை இல்லை என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நீதி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைகள் வெளியிட்ட புதிய உத்தரவின்படி குடியேறிகள் தொடர்பான ஜனாதிபதியின் தடையை மீறும் நபர்களுக்கு புகலிடம் மறுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டிற்குள் சட்டவிரோதமாக அல்லது ஆவணங்கள் இன்றி நுழையும் அனைத்து வெளிநாட்டினரின் வருகையை இடைநிறுத்துவது மற்றும் நாட்டின் குடியேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி அமெரிக்காவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டவர்களின் புகலிடக் கோரிக்கையினை மறுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தேசிய நலனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைபவர்கள் மீது ஜனாதிபதி இடைநிறுத்தம் அல்லது தடுத்து நிறுத்தும் ஆணையை வெளியிட்டால் அவர்கள் அமெரிக்காவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியாது.
2018 அமெரிக்க இடைக்கால தேர்தல் பிரச்சாரத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியேற்றம் முக்கிய கவனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.