ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.
அதனடிப்படையில், பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 16ஆவது அத்தியாயத்தின் கீழ் சுயாதீன குழுக்கள் தத்தமது வேட்புமனு தாக்கலின்போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் 2ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் கணக்கிட்டு தெரிவத்தாட்சி அதிகாரியிடம் வைப்பிலிடவேண்டும். அத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் வைப்பிலிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கட்டுப்பணங்களை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட மாவட்ட செயலகத்தில் அல்லது மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒவ்வொறு தேர்தல் தொகுதிக்கும் தெரிவுசெய்துகொள்ளப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக இரண்டு வேட்பாளர்களின் பெயர்களை வேட்புமனுவில் குறிப்பிடவேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் அமைப்பிற்கு முரனானது எனத் தெரிவித்து 15க்கு மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டமா அதிபரின் விளக்கத்திற்காக நாளைவரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் தேர்தல் ஆணைக் குழுவை செயலிழக்க வைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் யார் தடுத்தாலும் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இவாறான சூழலில் நீதிமன்றில் விசாரணை நடைபெறும் போது அதனையும் மீறி கலைக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தலுக்காக, இரண்டாவது வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் நாளைய தீர்ப்பு இன்றே வெளியாகி உள்ளதா? என்ற சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.