மஹிந்த ராஜபக்ஸ தொடர்ந்து பதவி வகித்த முடியாது எனவே அவர் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற சபை அமர்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபித்திருக்க வேண்டும். அது ஜனநாயக கடமை. அந்த கடமையை நிறைவேற்ற அவர் தவறினார்.
நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றியாவது அவர் பெரும்பான்மையை நிருபித்திருக்கலாம் அதனையும் அவர் செய்யவில்லை.
பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டதுடன், அமைச்சரவை புதிதாக பலர் நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விலை போனார்கள். இவ்வாறு பல முயற்சிகளை மேற்கொண்டும் மகிந்தவால் 113 உறுப்பினர்களை சேர்க்க முடியாமல் போனது.
இவ்வாறான செயற்பாடுளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, பிரதமர் மற்றும் அவர் தாலைமையிலான அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, குரல் வாக்கெடுப்பின் மூலமாக (ஆம்/இல்லை) தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 128 பேர் கையொப்பமிட்டு கடிதமொன்றை சபாநாயகரிடம் கையளித்தனர்.
மஹிந்த ராஜபக்ஷ நேற்று சபையில் ஆற்றிய உரைக்கு எதிராகவும், அவருக்கு எதிராகவும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றம் கூடிய போது,சபாநாயகரை சபைக்கு வரவிடாது அவரது கதிரை மற்றும் அதனைச் சுற்றி மஹிந்த அணியினர் கூடி குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அப்போது தாமதமாக பாதுகாப்புடன் வந்து தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
மஹிந்த மீதும், அவர் தலைமையிலான அரசாங்கம் மீதும், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தீர்மானத்துக்கமைய மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவர் பதவி விலக வேண்டும். பதவி வகிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை.
அத்துடன், அமைச்சுகளில் அமைச்சர்களாக பதவி வகிப்பவர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலக வேண்டும். அவர்கள் அவ்வாறு பதவி வகிப்பது தவறு.
தொடர்ந்தும் பதவி வகித்தால் அவர்கள் ஜனநாயக விரோதிகளாக கருதப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஒருவர் பிரதமராகவோ அரசாங்கத்தை ஆளவோ முடியாது. இது சட்டத்துக்கும்,ஜனநாயகத்துக்கும் விரோதமான செயற்பாடாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும்….
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது மஹிந்த ராஜபக்ஸவின் ஜனநாயகக் கடமை. இருப்பினும், பெரும்பான்மையை அவர் பாராளுமன்றத்தில் நிரூபிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.
பணம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்க பெருமுயற்சி இடம்பெற்ற விடயம் அனைவருக்கும் தெரியும். இருந்தும், அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
கடந்த 14 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்து கையெழுத்திட்டு சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர். இலத்திரனியல் ஊடகம் மூலம் வாக்கெடுப்பு நடத்த மீண்டும் பாராளுமன்றம் கூடியது. ஆனால், மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் பாராளுமன்றத்தில் குழப்பமேற்படுத்தி, சபாநாயகர் வருகையைக் குழப்பினார்கள். மூன்றாவது முறையாகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமராகப் பதவி வகிக்க மஹிந்த ராஜபக்ஸவிற்கு உரிமை இல்லை. உடனடியாக அவர் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவர் ஜனநாயக விரோதியாவார். என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியை அடுத்து மீண்டும் பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.