நாட்டில் நிலவுகின்ற அரசியல் நெருக்கடி ஆழமாகி சந்தி சிரிக்கின்ற நிலைமைக்கு கொண்டு சென்றிருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற தகைமையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்டோபர் 26 ஆம் திகதி தன்னிச்சையாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்ததன் மூலம் இந்த நெருக்கடிக்கான பிள்ளையார் சுழி இடப்பட்டிருந்தது.
பிரதமர் பதவியில் மாற்றங்களைச் செய்து நாடாளுமன்றத்தை முடக்கியதுடன் அவர் நின்றுவிடவில்லை. வலிந்து மூடப்பட்ட நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல முற்பட்டதையடுத்து நிலைமைகள் மோசமடைந்தன. நாடாளுமன்றத்தைக் கலைத்த அவருடைய செயற்பாட்டிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்ததையடுத்து, நீதித்துறை சுதந்திரமாகச் செயற்பட்டு, நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாத்ததாகக் கருதப்பட்டது, அத்துடன், நாடு முகம் கொடுத்திருந்த நெருக்கடிகளுக்கு முடிவேற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நெருக்கடிகள் தணியவில்லை.
அரசியல் கட்சிகளினதும், ஜனநாயக சக்திகளினதும் வேண்டுகோளை ஏற்று, முடக்கி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் நவம்பர் 16 ஆம் திகதி கூட்டப்படும் என்ற தனது முடிவை, மாற்றி 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் என்று அதிகாரபூர்வமாக ஜனாதிபதி விடுத்திருந்த அறிவித்தலுக்கமைய சபாநாயகர் நாடாளுமன்றத்தைக் கூட்டியிருந்தார்.
நிறைவேற்று அதிகாரத்திற்கும், சட்டவாக்கும் அதிகாரத்திற்கும் இடையில் கயிறிழுப்பாக ஓர் அதிகாரப் போட்டி நிலவுகின்ற சூழலில், தன்னிச்சையாகச் செயற்படுகின்றார் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகாத வகையில், சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.
கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்குரிய பெரும்பான்மை ஆதரவு குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்போது, மகிந்த ராஜபக்ச வெளிநடப்பு செய்திருந்தார். ஆயினும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதையடுத்து, புதிய பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். பிரரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்ததும், சபையில் பிரசன்னமாகியிருந்த மகிந்த ராஜபக்ச அணியினர் கூச்சல் எழுப்பி குழப்பம் ஏற்படுத்த முனைந்தனர். நாடாளுமன்றத்தை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
மறுநாள் கூடிய நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆற்றிய விசேட உரையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் முன்வைத்த கோரிக்கைக்கு சபாநாயகர் செவிசாய்த்ததையடுத்து, நாடாளுமன்றம் போர்க்களமாகியது. மக்கள் பிரதிநிதிகளாக, மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், மக்களுடைய நலன்களுக்கான செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மகிந்த ராஜபக்ச தரப்பினர் இழுபறியிலும், அடிதடியிலும் ஈடுபட்டிருந்தனர். சபாநாயகர் கரு ஜயசூரிய மீது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாய்ந்தபோது, குப்பை கூடைகளும் தண்ணீர்ப்போத்தலும் அவரை நோக்கி வீசப்பட்டன. நாடாளுமன்றம் கலவர களமாகியது.
சபாநாயகர் சபையைத் தொடர்ந்து நடத்தவிடாமல், மகிந்த ராஜபக்ச தரப்பினர் அவரது மேசையைச் சூழ்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். சபாநாயகர் என்பவர் சபைக்குத் தலைமையேற்று உறுப்பினர்களை வழிநடத்தி, சபை நடவடிக்கைகளைக் கொண்டு செல்லுகின்ற முக்கிய பொறுப்பை நிறைவேற்ற வேண்டியவர். சபையின் நாயகர் என்ற வகையில் அவருக்கு உரிய மரியாதையும் கௌரவமும் கொடுக்கப்படவேண்டியது அவசியம். அது ஒரு நாடாளுமன்றத்தின் பாரம்பரியமும் ஆகும்.
ஆனால் சபாநாயகரை மதித்துச் செயற்படுகின்ற பண்பு தவறியவர்களாக, தெருச் சண்டியர்களைப்போன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நடந்து கொண்டிருந்தமை நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தையே ஏற்படுத்தியிருக்கின்றது. ஜனநாயகம் குறித்தும், அதன் பாரம்பரியம் குறித்தும் பெருமை கொண்டுள்ள ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேவலமான முறையில் நடந்து கொண்டதை காணொளி மூலமாக, அந்த உறுப்பினர்களைத் தெரிவு செய்த நாட்டு மக்கள் நேரடியாகக் கண்டு முகம்; சுழித்தார்கள்.
இந்த சம்பவத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய ரஞ்சன் மற்றும் தேவாரப்பெரும ஆகியோர் கூரிய ஆயுதங்களைக் கையில் வைத்து கலவரத்தில் ஈடுபட்டிருந்ததாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, பாராளுமன்ற அமளிகளின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரநிலைமை தொடர்பான காணொளியில் கையில் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றை வைத்திருந்த காட்சியும் பதிவாகியிருப்பது நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவின் கூற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
நாட்டின் ஆட்சி நிர்வாகக் கடமைகளைச் செய்வதற்காகவே நாடாளுமன்றத்திற்கு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் செல்கின்றார்கள். ஆனால், நாடாளுமன்றத்தின் உள்ளே, கூரிய ஆயுதத்தை கையில் வைத்திருந்த காட்சி, ஒரு சிலரின் வன்முறை சார்ந்த மனோ நிலையையே வெளிப்படுத்தியிருக்கின்றது. நாடாளுமன்றம் என்பது ஆட்சி நிர்வாகம் மேற்கொள்ளப்படுகின்ற புனிதமான ஓரிடமாகும்.
அங்கு திறந்த மனத்துடன் காரியங்கள் ஆற்றப்பட வேண்டும். கருத்துக்கள் பரிமாறப்பட்டு அரசியலமைப்பின் வழிகாட்டலில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். தெருச் சண்டியர்களைப் போன்று மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் நடந்து கொள்வதால் நாட்டிற்கு அவமானமே ஏற்படும். நாட்டின் கௌரவமும் சிதைக்கப்படும். நாடாளுமன்றத்தில் 15 ஆம் திகதி வியாழன்று இடம்பெற்ற நிகழ்வுகள் நாட்டு மக்கள் வெட்கித் தலைகுனியத் தக்க வகையிலான நிலைமையையே ஏற்படுத்தியிருக்கின்றன.
அரசே இல்லாத நாடா……..?
போர்க்களத்தைப் போன்ற ஒரு நிலைமை உருவாகிய ஒரு சூழலில்தான் பிரதமரும் இல்லை. அமைச்சரவையும் கிடையாது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டிருந்தார். பிரதமர் பதவியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணான வகையில் நடந்து கொண்டதை ஏற்காத ஓர் அரசியல் நிலைப்பாட்டில் அவருடைய இந்தக் கருத்து வெளிப்பட்டிருந்த போதிலும், சபையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பாடற்று தான் தோன்றித்தனமாக நடந்து கொண்டதைத் தாளாத மன நிலையிலும் நாடாளுமன்றத்தின் தலைமை நிலையிலான அவரிடம் இருந்து இந்தக் கருத்து வெளிப்பட்டிருக்கின்றது. இந்தக் கருத்தில் உண்மை இல்லையென்று ஒதுக்கிவிடவும் முடியாது. நாட்டின் அரசியல் யதார்த்தம் நெருக்கடி நிலைமை காரணமாக அந்த அளவுக்கு மோசமாகியிருந்தது.
பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்திருந்தார். ஆனால் பதவி நீக்கம் செய்யப்பட்டமை சட்டவிரோதமானது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து ரணில் விக்கிரமசிங்க பிரமருக்கான உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறப் போவதில்லை என விடாப்பிடியாகப் போராடி வந்தார். ஆனால் புதிதாகப் பிரதமராக நியமனம் பெற்ற மகிந்த ராஜபக்ச, பிரதமருடைய அலுவலகத்தில் இருந்து செயற்படத் தொடங்கியிருந்தார்.
ஏட்டிக்குப் போட்டியாக பிரதமர் பதவியில் இருவர் ஒட்டிக்கொண்டிருந்ததனால், நாட்டில் இரண்டு பிரதமர்கள் என்ற நிலைமை உருவாகியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராகிய மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து காரியங்களை முன்னெடுப்பதில் தீவிரமாக இருந்தார். புதிய பிரதமர் நியமனம் செய்யப்பட்ட சூட்டோடு சூடாக முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள், முக்கிய பதவி நிலை அதிகாரிகள் மாற்றப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அரசியல் மயப்பட்டுள்ள இலங்கையின் அரச நிர்வாகக் கட்டமைப்புக்குள்ளே பிரதமர் பதவியில் செய்யப்பட்ட திடிர் மாற்றம் என்பது அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி சரியானதா இல்லையா என்ற விவாதம் காரசாரமாக மேலோங்கியிருந்த ஒரு சூழலில், அமைச்சுக்கள் திணைக்களங்களின் தலைமை நிலையில் ஏற்பட்ட இந்த திடீர்; மாற்றத்தினால், இடம் மாற்றம் பெற்ற அதிகாரிகளின் கீழ் பணியாற்றிய அரச பணியாளர்கள், புதியவருக்கா அல்லது பழையவருக்கா, யாருடைய உத்தரவுக்குப் பணிந்து பணியாற்றுவது என்று தெரியாமல் தடுமாற நேர்ந்தது.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கு பெரும்பான்மை பலம் உள்ளதா என்பதைப் பரீட்சித்து தெளிவுபடுத்திக் கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராகக் கிளப்பப்பட்ட கலவர நிலையில் அரசாங்கமே இல்லை என்ற தொனியில் சபாநாயகர் கருத்து வெளியிட நேர்ந்திருந்தது.
நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரதமரைப் பதவி நீக்கம் செய்து புதியவரை நியமித்தமை, அரசியலமைப்புக்கு உட்பட்ட நடவடிக்கையா அல்லது எதிரான நடவடிக்கையா? அது ஜனநாயக முறைக்கு அமைவானதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு, பிரச்சினையாகி, ஓர் அரசியல் நெருக்கடி உருவாகியிருந்த நிலையில்தான், நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளும், அதன் ஜனநாயகப் பாரம்பரியம், அரசியலமைப்பு விதிகள் என்பவற்றுக்கு முரணாக இடம்பெற ஆரம்பித்திருந்தன.
நாடாளுமன்றத்தின் உள்ளே சபாநாயகரை மதிக்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடியடி மோதல்களில் ஈடுபட்டிருந்த வேளை, இரண்டு தரப்பினருக்கும் தலைவர்களாக விளங்குகின்ற ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச இருவருமே தமது ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு முற்பட்டிருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கும் தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாதது போன்றதொரு தோற்றப்பாட்டில் அவர்கள் வாளாவிருந்ததை அந்த கலவரம் தொடர்பான காணொளியில் காணக் கூடியதாக இருந்தது.
கலவரத்திலும் மோதல்களிலும் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, அவர்களுக்குத் தலைமையேற்றுள்ள – பிரதமர் பதவியில் போட்டா போட்டியில் ஈடுபட்டிருக்கின்ற இரண்டு தலைவர்களும்கூட தங்களுடைய கடமையையும் பொறுப்பையும் உணராதவர்களாக அல்லது அவற்றைப் புறந்தள்ளியவர்களாக நடந்து கொண்டிருந்தார்கள் என்றே கூற வேண்டும். ஜனநாயக ரீதியில் இந்த நிலைமை கண்டனத்துக்குரியது. மிகவும் துரதிஸ்டவசமானதும்கூட.
அரச தலைமைகளில் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புக்கும் முரணான வகையில் தன்னிச்சையாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளினால், அரசாங்கம் செயலற்றுப் போவதை நாட்டின் இந்த அரசியல் நெருக்கடி மிகவும் துலாம்பரமாக வெளிப்படத்தியிருக்கின்றது.
அமைதி காத்த மக்களும் ஏனைய தரப்பினரும்
நாட்டின் நிறைவேற்று அதிகாரத்திற்கும், சட்டவாக்கத்துறைக்கும் இடையில் ஏற்பட்ட அதிகாரப் பலப்பரீட்சையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தரப்பினருக்கும், மகிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் மோதல்கள் நாடாளுமன்றம் தனது கௌரவத்தை இழக்கும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கியிருக்கின்றது.
நாடாளுமன்றம் நாட்டின் நிலைமைகள் குறித்து கவனம் முக்கியமாகக் கவனம் செலுத்திச் செயற்பட வேண்டியதை விடுத்து, மோதல்களிலும் கருத்து முரண்பாடுகளிலும் ஈடுபட்டிருப்பதனால், நாட்டின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறிக்கு உள்ளாகும் அபாயம் எழுந்துள்ளது. நாடு சீரான முறையில் இயங்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அடுத்த வருடத்திற்கான செயற்பாடுகளுக்குரிய நிதி நிலைமை குறித்து கவனம் செலுத்தி செயற்பட வேண்டிய முக்கியமான ஒரு காலகட்டத்தில் அதிகாரப் போட்டியில் தலைகரணமாக அரச தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டிருப்பது நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை.
நாடு ஏற்கனவே மோசமானதொரு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்றது. நிதித்துறை வீழ்சசி கண்டு வருகின்றது. டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி மிகப் பயங்கரமான பள்ளத்தாக்கை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றது. நிதி நிலைமையிலும் நாட்டின் பொருளாதார நிலையிலும் ஏற்பட்டுள்ள பாதிப்பும் ஸ்தம்பித நிலைiமையை நோக்கிய நகர்வும் நாடு முழுமையாக செயலிழக்கும் அபயாகரமான நிலைமைக்கு கட்டியம் கூறிநிற்கின்றன.
இந்த நிலைமை குறித்து கரிசனையும் கவனமும் கொள்ள வேண்டிய ஆட்சியாளரகள் அதிகாரப் போட்டியிலும், அரசியலமைப்பின் விதிமுறைகளுக்கு அமைவாக மாற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற அரசியல் ரீதியான ஆய்விலும் பட்டிமன்ற விவாதத்திலும் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
இந்த பின்னணியில்தான், புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச எரிபொருளின் விலையைக் குறைத்துள்ளதாகப் பிரகனம் செய்துள்ளார். அரசியல் நெருக்கடி காரணமாக கவனிப்பாரற்று புறந்தள்ளப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டம் குறித்தும், நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் கவலையடைய வேண்டிய நிலையில், மக்களுக்கு நிவாhரணம் அளிக்கின்ற ஒரு போலியான நோக்கத்திலேயே இந்த எரிபொருள் விலைகுறிப்பு குறித்த அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது.
நாட்டில் அரசாங்கம் ஆட்டம் கண்டு அரசியல் தள்ளாடிக்கொண்டிருக்கின்ற நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது, நாட்டு நிலைமை இன்னும் என்னென்ன வகையில் கேவலமான நிலைக்கு ஆளாகப் போகின்றதோ என்று பொதுமக்களும் வர்த்தகம உள்ளிட்ட துறைசார்ந்தவர்களும் கவலையடைந்துள்ள நிலையில், அவர்களுடைய கவனத்தைத் திசைதிருப்புகின்ற ஒரு நோக்கத்திற்காகவே இந்த எரிபொருள் விலைகுறைப்பு குறிதத அறிவித்தல் வெளியாகியுள்ளதாகக் கருத வேண்டியிருக்கின்றது.
அரசியல் நெருக்கடி காரணமாக சட்டமும் ஒழுங்கும் எந்த நேரத்திலும் சீர்குலையலாம். நாடாளுமன்றம் பிளவுபட்டு மோதல்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்த மோதல்கள் மக்கள் மத்தியில் நாட்டின் பல பிரதேசங்களிலும் எதிரொலிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினரும், தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான முப்படையினரும் திகைப்படைந்த ஒரு நிலையிலேயே அரச தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியைக் கவனித்து;க கொண்டிருக்கின்றார்கள்.
நாட்டின் அரசியலமைப்புக்கு உரிய கவனமும், கௌரவமும் அளிக்கப்படவில்லை. ஜனநாயகத்திற்குரிய மதிப்பளிக்கப்படவில்லை. ஆட்சி முறையின் தாற்பரியமும், அதற்கான பண்புகளும் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. அரசியலமைப்புக்கு மதிப்பளித்து, அதன்படி ஒழுக வேண்டும். ஜனநாயக முறைமையைக் கடைப்பிடித்துச் செயற்பட வேண்டும் என்று உலக நாடுகளும் ஜனநாயகத்தின் மீது பற்றுள்ள நாடுகளும், ஜனநாயகச் செயற்பாட்டாளர்களும் இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்றார்கள்.
ஆனால் அந்த வலியுறுத்தல்கள் நாட்டின் ஆட்சியாளர்களுடைய செவிகளில் ஏறியிருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கவலைக்குரிய நிலைமைகளின் பின்னர் ஜனாதிபதிக்கும் சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அரசியலமைப்புக்கும், நாடாளுமன்றத்துக்கும் உரிய மதிப்பளித்துச் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்து, அரசாங்கத்தை ஸ்திரநிலைப்படுத்துவதற்கு உடன்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஆயினும் அக்டோபர் 26 ஆம் திகதி எடுத்த முடிவுக்கமைய ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்ததில் இருந்து எந்தவிதமான மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விட்டுக்கொடுக்கத் தயாரக இல்லை என்றே கூறப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து எப்படியாவது நீக்கிவிட வேண்டும் என்பதில் அவர் மிக உறுதியாக இருப்பதாகவே தெரிகின்றது. நெருக்கடியைத் தணிப்பதற்கு புதிய பிரதமருக்கப் பெரும்பான்மை உள்ளதா என்பதை மீண்டும் ஒரு நம்பிக்கை இல்லாப் பிரேரணையின் மூலம் பரிசீலிக்கத் தயாராகியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக வேறு ஒருவரை வேண்டுமானால் பிரதமராக நியமிக்க முடியும் என்று திட்டவட்டமாக, இந்தக் கலந்துரையாடலின்போது தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இந்த நிலையில் நாட்டின் அரசியல் நெருக்கடி எவ்வாறு தணியப் போகின்றது என்பது கேள்விக்குரியயதாகவே உள்ளது.
—