மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிரவிசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவற்துறை உத்தியோகத்தர் நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை பாராதூரமன விடயம் என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பல குற்றச்செயல்கள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்திய நிசாந்த சில்வாவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை பாரிய தவறு என தெரிவித்துள்ள ஹரீன் பெர்ணான்டே இது குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.
நிசாந்த சில்வா போன்ற திறமையான உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்படுவது கவலைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்பெரேரா காவற்துறைத் திணைக்களம் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
காவற்துறை மா அதிபர் பூஜித்ஜெயசுந்தர இவ்வாறான சட்டவிரோத உத்தரவுகளை ஏற்று தனது அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்து வெட்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மகிந்த ராஜபக்ச தரப்பினர் திறமையான அதிகாரிகளை இடமாற்றுவதற்காகவா அரசாங்கத்தை கைப்பற்றினார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.