நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கேரியா அணி பயிற்சியாளர் பீற்றர் லிசோ(Petar Lesov ) வை இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் உத்தரவிட்டுள்ளது . நேற்றையதினம் நடைபெற்ற பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹலுக்கு எதிரான போட்டியில் பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவா தோல்வியடைந்ததாக அறிவித்ததும் அதிருப்தி அடைந்த பயிற்சியாளர் பீற்றர் லிசோவ் தண்ணீர் போத்தலை மைதானப் பகுதியில் எறிந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
அது தொடர்பில் தனது பிரதிநிதி மூலம் விசாரித்த சர்வதேச குத்துச்சண்டை சங்கம் பீற்றர் லிசோவை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவரது அடையாள அட்டையும் பறிக்கப்பட்டுள்ளதுடன் அவர் மைதானத்துக்குள் நுழைவதற்கும் தடை விதித்துள்ளதுடன் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட 57 வயதான பீற்றர் லிசோவ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.