பெரும்பான்மை இல்லாமையினாலேயே மகிந்த ராஜபக்ச ஆதரவுத் தரப்பினர் சபாநாயகரை எதிர்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓரிரு தினங்களாக சபாநாயகர் கரு ஜயசூர்யாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது சபாநாயகர் மற்றும் தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சபாநாயகரின் நிலைப்பாடு வேறு, தமது நிலைப்பாடு வேறு. அவர் எங்கு பெரும்பான்மை இருக்கின்றதோ அதற்கு சார்பாகவே கருத்துக்களை கூறிவருகிறார் எனவும் 2015 ஆம் ஆண்டு சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காத இவர்கள் கடந்த நாட்களாக அவர் மீது தற்போது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தாம் சபாநாயகருக்கு அழுத்தம் விடுப்பதாக தயாசிறி ஜயசேகர கூறியுள்ளதாக தெரிவித்த நவீன், கரு ஜயசூரியவை அவ்வாறு முடக்க முடியாது எனவும் பெரும்பான்மை இல்லாமையினாலேயே அவர்கள் இவ்வாறு பேசுவதாகவும் இதனை இந்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் மகாநாயக்க தேரர்களை சந்திக்கச் சென்றபோது ஜனாதிபதித் தேர்தலின்போது ஒரு பொது வேட்பாளரை முன்நிறுத்துவதாக தாம் தெரிவித்துள்ளதை நினைவுபடுத்திய அவர் வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்குவோம் என்றும் மீண்டும் குறிப்பிட்டார்.