குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் மூன்றாம் எதிரியான பிள்ளையானை தொடர்புடுத்தி ஏனைய இரண்டு எதிரிகளால் வழங்கப்பட்ட வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா இல்லையா என்பது தொடர்பான கட்டளையானது எதிர்வரும் ஜனவரி 09ஆம் திகதி வழங்கப்படும் என மட்டகளப்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு டிசெம்பர் 25ஆம் திகதி மட்களப்பு பெரிய தேவாலயத்தில் நத்தார் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
இக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சி. சந்திரகாந்தன் உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட இவர்களுக்கு எதிராக மட்டகளப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வழக்கு விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து இக் கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்களான ரெங்கசாமி கனகநாயகம் (கஜன் மாமா), எட்லின் சில்வா கிருஸ்னா நந்தராஜா (பிரதீப் மாஸ்ரர்), சிவனேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மிகிரா லெப்டேல் கலீல் (சுரேஸ், மஞ்சுள, சலா), அரியநாயகம் தர்மநாயகம் (ஒலப்பட்டி குமார்), குணசிங்க ஆராஜ்சிலாகே சரிந்து மதுசங்க (வினோத்) ஆகிய ஆறு பேரினை எதிரிகளாக குறிப்பிட்டு இவர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு உட்பட 11 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பகிர்வு பத்திரமானது சட்டமா அதிபரால் மட்டகளப்பு மேல் நீமிமன்றில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
இந் நிலையில் இவ் வழக்கில் 1ஆம் மற்றும் 2ஆம் எதிரிகள் மூன்றாம் எதிரியான பிள்ளையானை தொடர்புபடுத்தி மட்டகளப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது அவர்கள் இருவராலும் சுயமாக வழங்கப்படவில்லை என எதிரிதரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டிருந்தனர்.
இதனையடுத்து அது தொடர்பான உண்மை விளம்பல் விசாரணையானது இடம்பெற்று அது முடிவுற்று நேற்றைய தினம் எதிரி தரப்பு மற்றும் வழக்கு தொடுநர் தரப்பு உண்மை விளம்பல் விசாரணையின் தொகுப்புரைக்காக திகதியிடப்பட்டிருந்தது.
இதன்படி நேற்றைய தினம் இவ் தொகுப்புரையானது மட்டகளப்பு மேல் நீதிமன்ற நீதிபதி இர் சதீன் முன்னிலையில் இடம்பெற்றதுடன் இவ் வழக்கு விசாரணைகளை மட்டகளப்பு மேல் நீதிமன்ற அரச சட்டவாதி நாகரட்னம் நிஷாந்துடன் சட்டமா அதிபர் திணைக்கள சிரேஸ்ட அரச சட்டவாதி மாதவ தென்னக்கோன் நெறிப்படுத்தியிருந்தார்.
இதன்போது நீதிமன்றில் 5ஆம் எதிரி முன்னிலையாகததுடன் அவர் சார்பில் சட்டத்தரணிகளும் யாரும் முன்னிலையாகியிருக்கவில்லை. எனைய ஜந்து எதிரகளும் முன்னிலையாகியிருந்ததுடன் அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது முதலில் எதிரிகள் தரப்பு தொகுப்புரை ஆரம்பமாகியது.
இதன்படி இவ் வழக்கு தொடர்பில் மூன்றாம் எதிரியான பிள்ளையானை தொடர்புபடுத்தி முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது அவர்களால் சுயமாக வழங்கப்படவில்லை எனவும், குற்றப் புலனாய்வு பிரிவின் அச்சுறுத்தல், துண்டுதல் மற்றும் பிள்ளையானை தொடர்புடுத்தி சாட்சியமளித்தால் உங்கள் இருவரையும் விடுதலை செய்வோம் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டமையாலேயே அவர்கள் அவ்வாறு வாக்குமூலம் வழங்கியதாக எதிரி தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தனது தொகுப்புரையில் குறிப்பிட்டார்.
மேலும் இது தொடர்பாக மேல் நீதிமன்றில் சாட்சியமளித்த மட்டகளப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அப்துல்லா தனது சாட்சியத்தில் முரண்பட்டிருந்ததாகவும் எனவே 1ஆம் மற்றும் 2ஆம் எதிரிகளது குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது அவர்களால் சுயமாக வழங்கப்படவில்லை என அவர் தனது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்கள சிரேஸ்ட அரச சட்டவாதி மாதவ தென்னக்கோன் தனது சமர்பணத்தை முன்வைத்தார். அதில் அவர்,இவ் வழக்கு தொடர்பில் 1ஆம் மற்றும் 2ஆம் எதிரிகள் சுயமாகவே தமது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை முன்வைத்ததாக தெரிவித்தார். மேலும் எதிரி தரப்பு சாட்சியத்திற்காக அழைக்கப்பட்ட மட்டகளப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அக்பர் மற்றும் மட்டகளப்பு நீதிவான் நீதிமன்ற பதிவாளர் சேதுபதி சந்திரசேகரம் ஆகியோர் எதிரிகளை காப்பாற்றுவதற்காக பொய் சாட்சியம் கூறியதாகவும் தனது சமர்பணத்தில் சிரேஸ்ட அரச சட்டவாதி குறிப்பிட்டார்.
எதிரிகள் தரப்பு மற்றும் வழக்கு தொடுநர் தரப்பு ஆகிய இரு தரப்பு சமர்ப்பணங்களையும் அவதானித்த மன்றானது, இவ் வழக்கில் 1ஆம் மற்றும் 2ஆம் எதிரிகள் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அவர்களால் சுயமாக வழங்கப்பட்டதா இல்லையா என்பது தொடர்பான கட்டளையை எதிர்வரும் ஆண்டு ஜனவரி 09ஆம் திகதி வழங்குவதாக தெரிவித்து அது வரை இவ் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து மட்டகளப்பு மேல் நீதிமன்ற நீதிபதி இர் சதீன் உத்தரவிட்டார்.
இதேவேளை எதிரி தரப்பு சட்டத்தரணி, இவ் வழக்கின் மூன்றாம் எதிரியான பிள்ளையான் தேர்தலில் போட்டியிட இருப்பதால் அது தொடர்பான வேட்புமனுவில் கையெழுத்திட நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என மன்றை கோரினார்.
இதற்கு நீதிபதி, தேர்தலானது முறையாக அறிவிக்கப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது இச் செயற்பாடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.