கஜா புயல் விவகாரத்தில் மாற்றுத் திறனாளிகள் மீது சரியாக கவனம் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதியன்று வீசிய புயலால் திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களது வாழ்வாதாரத்தையே இழக்கும் அளவுக்கு கடும் சேதம் ஏற்பட்டதோடு, இன்னும் அந்தத் தாக்கத்திலிருந்து மீள முடியாத நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என டிசம்பர் 3 இயக்கம் குற்றம்சுமத்தியுள்ளது. கஜா புயலால் டெல்டா மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் அதில் மாற்றுத் திறனாளிகள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை மாற்றுத்திறனாளிகள் துறை ஆய்வு செய்ததா என்பது கேள்விக்குறியே என டிசம்பர் 3 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கென்று இந்த அரசு எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. இதனால் மிகப்பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இருக்க இருப்பிடமற்று, ஊன்ற ஊன்றுகோலற்று அனைத்து விதமான உதவி உபகரணங்களும் ; கஜாவினால் செயலற்று உள்ளது.
ஆகவே மாற்றுத் திறனாளிகளின் துயர் துடைக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையினை 1000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்தித் தருமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது