மகளிர் உலக சம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் மேரி கோம் ஆறாவது உலக சம்பியன்ஷிப் பட்டத்தை வென்று, உலக அளவில் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் மகளிர் உலக சம்பியன்ஷிப் தொடரில் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மேரி கோம், உக்ரைன் நாட்டின் ஹன்னா ஒக்ஹோடாவை 5-0 என வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் ஆறாவது சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த 6வது சம்பியன்ஷிப் பட்டத்தின் மூலம் மேரி கியூபாவின் பிரபல குத்துச்சண்டை வீரர் பெலிக்ஸ் சவானின் சாதனையை சமன் செய்துள்ள அதேவேளை மகளிர் பிரிவில் அதிக முறை சம்பியன் பட்டம் வென்று முதல் இடத்தை பிடித்துள்ளார். தன் முதல் உலக சம்பியன்ஷிப் பதக்கத்தை தன் 19 வயதில் வென்ற மேரி பின்னர் 16 ஆண்டுகள் கழித்து, தற்போது 35 வயதில் தன் ஆறாவது தங்கத்தை வென்றுள்ளார்.
2001இல் மகளிர் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற மேரி அடுத்து 2002, 2005, 2006, 2008, 2010 மற்றும் 2018இல் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது