நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில் வீடுகள் இல்லாத எமது மக்களுக்கு வீட்டத் திட்டங்களூடாக வீடுகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அவ்வாறு வழங்கப்படும் திட்டத்தின்போது எதுவித முறைகேடுகளுக்கும் இடங்கொடுக்கப்பட மாட்டாது என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவை வழங்கும் நிகழ்சி திட்டத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிய மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களுக்கு மேலும் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் வீடுகளை வழங்க நாம் எண்ணியுள்ளோம். இத்திட்டங்கள் வழங்கப்படும் போது கடந்தகாலங்களில் புள்ளிகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற முறை காணப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இது தொடர்பில் இம்முறை அவதானம் செலுத்தி பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவற்றை பெற்றுக் கொடுக்க நிச்சயம் நான் நடவடிக்கை மேற்கொள்வேன்.
முக்கியமாக யாழ் குடாநாட்டில் அரச காணிகளில் வீடுகள் அமைத்து எமது மக்களுக்கு வழங்கப்பட்ட போதிலும் அவற்றில் பலர் குடியிருப்பதில்லை என தெரியவருகின்றது. அவ்வாறான வீடுகளை மீளப்பெற்று இதுவரை வீடுகள் கிடைக்கப்பெறாது வாழ்ந்து வரும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் புனரமைக்கப்படாத வீதிகளை செப்பனிடுவதற்காக 90 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து அதை நடைமுறைப்படுத்தும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் இலகு கடன் திட்டங்களை எமது மக்களுக்கு குறைந்த வட்டியில் பெற்றுக் கொடுப்பதற்காதன முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.