பிரித்தானிய பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிற்; உடன்படிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இன்று ஒப்புதல் அளித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இருந்து விலக பிரித்தானிய பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்ததனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக முடிவெடுத்துள்ளது
இதனையடுத்து ஐரோப்பிய ஒன்யித்திலுள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் – வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை தெரசா மே தயாரித்திருந்தார்.
குறித்த செயற்திட்ட அறிக்கைக்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியத்தின் தலைநகரான புரூசெல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சி மகாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ள 27 நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் தலைவர் டொனால்ட் ரஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த பிரிவு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜீன்-கிலாட் ஜங்கர் இந்தநாள் மிகவும் சோகமான நாளாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவைப் போன்ற ஒரு உயர்ந்த நாடு ஐரோப்பிய ஒன்றிய அமைப்பில் இருந்து விலகிச் செல்வதனை மகிழ்ச்சியான தருணமாகவோ கொண்டாட்டத்துக்குரிய சம்பவமாகவோ இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.