அலெப்போவில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீக்குவதாக சிரிய அரச படை அறிவித்துள்ளது. போராளிப்படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் நீக்கப்படுகிறது எனவும் சிரிய அரச படைகள் சர்வதேச செய்தி நிறுவனமான ஏஎப்பியிடம் தெரிவித்துள்ளன.
அலெப்போ நகரில் போராளிகள் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை சிரிய அரசுப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில் மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்றும் நோக்குடன் பாரிய தாக்குதல்களை அலெப்போ நகரில் சிரிய அரச படை மேற்கொண்டு வருகின்றது.
ஆயிரக்கணக்கான பொதுமக்களும் போராளிகளும் குறித்த பகுதியிலிருந்து வெளியேற முடியாத நிலையில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி வியாழக்கிழமை அமுலுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்த ஒப்பந்தம் நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் போராளிகளை வெளியேற்றும் நடவடிக்கையானது நிறுத்தப்பட்டுள்ளது.