பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மூன்றாவது வாரமாக நடைபெறும் போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளனன. காவல்துறை அதிகாரிகள் மீது மஞ்சள் நிற சாயம் வீசப்பட்டதால் காவல்துறையினர் போராட்டக்காரர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன் 39 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வார தொடக்கத்தில் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஈடுபட்டிருந்த போதும் ; எரிபொருள் வரியை கைவிடுவதில்லை என தெரிவித்தார்.உலக வெப்பமயமாதலை எதிர்கொள்ளும் விதமாக பிரான்ஸின் எதிர்கால ஆற்றல் திட்டம் இருப்பது அவசியம் எனத் தெரிவித்த அவர் இந்த வரியை எவ்வாறு அமுல்படுத்தலாம் என்ற யோசனைகளை தான் வரவேற்பதாகவும் தெரிவித்திருந்தார். இருப்பினும் அவரின் பேச்சினை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் நேற்று சனிக்கிழமையன்று பிரான்ஸ் முழுவதும் 1,600 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கு கொண்டதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதில் தலைநகரில் நடைபெற்ற போராட்டத்தை தவிர பெரும்பாலான போராட்டங்கள் அமைதியாக நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.