விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் வெளிநாடொன்றில் உயிருடன் உள்ளார் என கருணா அம்மான் என்ற, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளமை முழு பொய் என முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
வெடிகுண்டை வெடிக்கவைத்து பொட்டு அம்மான் யுத்தத்தின் இறுதி தருணங்களில் தற்கொலை செய்துகொண்டார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் காணப்பட்டனர் அவர்களில் 70 பேர் வரை அவருடனேயே கொல்லப்பட்டனர். இவர்களில் ஐவருடன் இணைந்து தப்பிச்செல்வதற்கு பிரபாகரன் திட்டமிட்டார் எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் பொட்டு அம்மானும் ஒருவர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா பொட்டுஅம்மான் துப்பாக்கிசூட்டில் காயமடைந்தார். அதன் பின்னர் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார் என கேபி கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பொட்டு அம்மான் நோர்வேயிற்கு தப்பிச்சென்றுவிட்டார் என தெரிவிக்கப்படுவது பொய்யான தகவல், என குறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா பொட்டுஅம்மானின் உடல மீட்கப்பட்டதாக கேபி உறுதிப்படுத்தியதாகவும் கூட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்றவேளை கருணா அம்மான் எனப்படுபவர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாக்கப்பட்டார். எனினும் பிரபாகரன் எங்கிருக்கின்றார் என்ற தகவல்களை அவர் படையினரிற்கு வழங்கவில்லை எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் கருணா இரவுவிடுதிகளில் காணப்பட்டார் அவ்வாறான நபர் தற்போது அரசியல் நெருக்கடியின் போது கருத்துக்களை வெளியிடுகின்றார் எனவும், அவ்வேளை அரசாங்கம் புலனாய்வு அமைப்புகள் ஊடாக கருணாவிற்கு வழங்கிய பணத்தை, அவர் அதனை குடித்து அழித்துவிட்டார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.