குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலி.தெற்கு பிரதேச சபைக்கு தெரிவான தி.பிரகாஸின் உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சி சார்பில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தி.பிரகாஸ் வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினராக தெரிவானார்.
அதன் பின்னர் சபையில் தவிசாளர் தெரிவின் போது அவர் சார்பான தமிழரசு கட்சியின் முடிவுகளை மீறி செயற்பட்டார் என அவரை தமிழரசு கட்சியில் இருந்து நீக்கி , அவரது சபை உறுப்பினர் பதவியை வறிதாக்க வேண்டும் என தேர்தல் அலுவலகத்திற்கு தமிழரசு கட்சியின் செயலாளர் அறிவித்திருந்தார்.
அந்நிலையில் தன்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க தடை விதிக்க வேண்டும் என யாழ்.மாவட்ட நீதிமன்றில் தி.பிரகாஸ் வழக்கு தாக்கல் செய்தார். குறித்த வழக்கில், தி.பிரகாஸ் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணனும் , தமிழரசு கட்சி சார்பில் , அக்கட்சியின் ஊடக பேச்சாளரும் , நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்கள்.
அந்நிலையில் ஒரிரு தவணைகளில் தனது சொந்த விருப்பின் பேரில் வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையிலையே வலி.தெற்கு பிரதேச சபை உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் த.அகிலன் அறிவித்துள்ளார். அதனால் தமிழரசு கட்சி சார்பில் வலி.தெற்கு பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர் நியமிக்கப்படவுள்ளார்.
இதேவேளை வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட க.சதிஸ் கட்சி முடிவுகளுக்கு கட்டுப்படவில்லை என அவரின் உறுப்பிரிமையை வறிதாக்க கோரி தேர்தல் அலுவலகத்திற்கு தமிழரசு கட்சியின். செயலாளர் அறிவித்துள்ளார்.
அந்நிலையில் தன்னை உறுப்புரிமையில் இருந்து நீக்க தடை விதிக்க வேண்டும் என கோரி யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கில், சதிஸ் சார்பில் வி.மணிவண்ணனும், தமிழரசு கட்சி சார்பில் எம்.ஏ.சுமந்திரனும் முன்னிலையானர்கள். குறித்த வழக்கு விசாரணை யாழ்.மாவட்ட நீதிமன்றில் நிலைவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.