இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான தீர்ப்பு இன்று திங்கட்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா மீது இந்திய நீதிமன்றங்களில் சி.பி.ஐ.யும், அமுலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தொடர்ந்துள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்காக, அவரை நாடுகடத்தி இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றது. இதன்போது விஜய் மல்லையா, வங்கிக்கடன் மோசடியிலும், சட்டவிரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதற்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக இந்திய அரசின் தரப்பில் வாதிட்டனர்.
எனினும் விஜய் மல்லையா சார்பில் முன்னலையான வக்கீல்கள் தொழிலில் ஏற்பட்ட தோல்வியால்தான் அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை என வாதிட்டதுடன் மொத்த கடன்களில் 80 சதவீதத்தை அவர் 2016 ஆம் ஆண்டு திரும்பச்செலுத்த முன்வந்தபோது அதை வங்கிகள் ஏற்க மறுத்து விட்டது எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டநிலையில் அவரை நாடு கடத்துவதற்கான தீர்ப்பு இன்று திங்கட்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.