ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு முறைப்பாடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 58 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
இதந்தநிலையில் இந்த விடயம் தொடர்பில் உச்சநீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் இடம்பெற்ற அமர்வு விசாரணை முடிந்த நிலையில், திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில் இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.
ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்றும், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.