குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள் கிடைத்துள்ளன. கல்வி மற்றும் இணைபாட விதானங்களில் சிறப்பாக செயற்பட்டமைக்காக இவ் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பாடசாலைகளின் பண்புத்தர சுட்டி வெளிவாரி மதிப்பீடு 2017 மற்றும் 2018 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் முதன்மை பாடசாலைக்கான விருதும், 2018 தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் 93 வீதமான மாணவர்கள் நூறு புள்ளிகளுக்கு மேல் பெற்றமைக்கான விருதும் கிடைத்துள்ளது.
மேலும் சிறந்த சுகாதார மேம்பாட்டுக்கான தேசிய விருது கடந்த 2015,2016,2017 ஆகிய மூன்றாண்டுகளும் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்றுள்ளன.இவ் விருது தேசிய அளவில் ஒரேயொரு தமிழ் மொழிமூல பாடசாலையே தெரிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் 2017 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் ஐந்து பாடசாலைகள் இவ்விருதுக்கு தெரிவு செய்யபட்டன. இதில் நான்கு பாடசாலைகள் சிங்கள மொழிமூல பாடசாலைகளாக இருந்துள்ளன. அத்தோடு இவ் விருதை பெற்றமைக்காக மத்திய கல்வி அமைச்சினால் அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்திற்கு கடந்த வருடம் சுற்றாடல் தகவல் நிலையம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.
மீள் குடியேற்றத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை ஒரு குறுகிய காலத்தில் பல சாதனைகளை படைத்துள்ளமை பாராட்டுக்குரியது என்றும், இதற்காக உழைத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகமும் பெற்றோர்களும் தங்களின் மனம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.