ஒரு வடகொரிய அமைச்சர் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. இவர்களில் ஒருவர் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன்னுக்கு மிகவும் நெருக்கமானவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்த ஓர் அறிக்கையில் இந்த மூவர் மீதும் பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ள அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாளுமன்றமான காங்கிரசில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை வடகொரியா குறித்து தயாரித்த ஓர் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
உலகில் மோசமாக மனித உரிமை மீறப்படும் இடங்களில் ஒன்றாக வடகொரியா இருக்கிறது. நீதிவிசாரணை இல்லாமல் கொல்வது, பலவந்தமாக உழைக்கவைப்பது, கொடுமைப்படுத்துவது, விருப்பம்போல நீண்ட காலத்துக்கு அடைத்துவைப்பது, வன்புணர்வு உள்ளிட்ட பாலியல் வன்முறைகள், கட்டாயப் படுத்தி கருக்கலைப்பு செய்வது போன்றவை அங்குள்ள மனித உரிமை மீறலின் வடிவங்கள் என என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரொபர்ட் பல்லாடினோ கூறியுள்ளார்.
இதேவேளை அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதையை நிரந்தரமாக மூடிவிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது