வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இச்செயலணியின் போது வட, கிழக்கு பிரதேசங்களின் நில விடுவிப்பு, பாதைகள் மற்றும் பாடசாலைகள் விடுவிப்பு, ஆனையிறவு உப்பளம், குறிஞ்சைத்தீவு உப்பளம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, முல்லைத்தீவு ஓட்டுத் தொழிற்சாலை, வட, கிழக்கு பிரதேசங்களின் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், படையினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளின் சமூக தாக்கங்கள், கேப்பாபிலவு காணி விவகாரம், வட்டகச்சி விவசாயப் பண்ணை விடுவிப்பு, ஒலுவில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது விரிவாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அத்துறை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.ஸ்ரீதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, கே.கோடீஸ்வரன், அங்கஜன் ராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் காணப்படும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பற்றியும் அதன்போது எழுகின்ற தடைகள் பற்றியும் விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.
அக்கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ;, இனங்காணப்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் அவற்றை புதிய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீட்டினை செய்வதாகவும் தெரிவித்ததுடன், தனியார் முதலீட்டாளர்கள் மூலமாகவோ அல்லது அரச-தனியார் கூட்டு முதலீட்டு மூலமாகவோ தற்போது வட, கிழக்கு பிரதேசங்களில் செயலிழந்திருக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அத்தோடு தனியாருக்கு சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதனால் அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, யாழ் இராணுவ கட்டளைத்தளபதி தர்ஷன ஹெட்டியாரச்சி, காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரச அதிபர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.