குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்கள் போராட்டங்களை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் தெற்கில் இராணுவ முகாம்களை அமைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அரசாங்கம் அகற்றி வரும் நிலையில், தெற்கில் இராணுவ முகாம்களை நிறுவும் பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்றுக்கு மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
அரச சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்படுவதற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், இந்த மக்கள் எதிர்ப்பை தடுக்க இவ்வாறு முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்வரும் நாட்களில் பசி காரணமாகவும், அரச சொத்துக்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவது காரணமாகவும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என்பதனை புரிந்து கொண்ட அரசாங்கம், தெற்கில் முகாம்களை நிறுவுவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம், பிரிவினைவாதம் காணப்பட்ட பகுதிகளிலேயே இராணுவ முகாம்கள் நிறுவப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ள அவர் அரச வளங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கும் திட்டமொன்றை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.