முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்யவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 21-5-1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு கடந்த ஆண்டில் வழங்கப்பட்டிருந்தது.
இந்த விருதினை திரும்பப்பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ் காந்தியின் தாயாரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 1984 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலைக்குப்பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைகளில் 2800 சீக்கியர்கள் பலியாகினர்.முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வன்முறைகளில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பு இருந்ததாக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்ற நிலையிலேயே அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.