மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர், வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் போயஸ் கார்டனை அரசுடைமையாக்கி, அதை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போயஸ் கார்டன் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் அறிவித்திருந்ததனையடுத்து போயஸ் கார்டனுக்கு உரிமை கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் தீபா சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது தொடர்பாக இடம்பெற்ற பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசு எடுத்த முடிவு சரியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டில் யாரும் வசிக்காததால் குடும்பங்கள் இடம் பெயருதல் பிரச்சனை இல்லை. நினைவு இல்லமாக மாற்றுவதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லை. அதுபோன்று இத்திட்டத்தால் சமூக தாக்கத்திற்கும் இடமில்லை எனக் கூறி வேதா இல்லத்தை மாற்றத் தடையில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.