குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்ததை எதிர்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று(22) காலை பணித்துள்ளதாக கிளிநொச்சி மாவடட் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மாவட்டத்தின் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளை எதிர்கொள்வதற்கு மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் தயாராக உள்ளன.
வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான முதலுதவிகள், சமைத்த உணவுகள் வழங்குவதற்கும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வருட இறுதி என்ற அடிப்படையில் மாவட்டச் செயலகத்தில் அதிக நிதி இருப்பில் இருப்பது இல்லை. ஆனாலும் எந்த நேரத்தில் அனர்த்ததை எதிர்கொள்வதற்கு எவ்வளவு நிதியையும் பெற்றுக்கொள்ளும் நிலையில் இக்கின்றோம் எனத் தெரிவித்த மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்.
கிளிநொச்சியில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் ஏழு நலன்புரி நிலையங்களில் 229 குடும்பங்களை சேர்ந்து 858 பேர் தற்போது( 22 அன்று காலை வரையான தகவல்) வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர்.
இவர்கள் இரத்தினபுரம் பொது நோக்கு மண்டபம், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம், பாரதிபுரம் மவி, இராமநாதபுரம் மாவடியம்மன் ஜெப ஆலயம், திருமுறுகண்டி இந்து வித்தியாலயம், உயதநகர் கிழக்கு பொது நோக்கு மண்டபம் ஆகிய இடங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்கியுள்ளனர். என கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தன் தெரிவித்தார்
இதேவேளை கண்டாவளை பிரதேசத்தில் ஏழு முகாம்களில் 341 குடும்பங்களைச் சேர்ந்த 1119 பேர் தங்கியுள்ளனர். அந்த வகையில் முரசுமோட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, தம்பிராசபுரம்அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, குமாரசாமிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, தர்மபுரம் பொது நோக்கு மண்டபம், தர்மபுரம் மேற்கு பரி லுர்த் தேவாலயம், பிரமந்தனாறு மவி. மயில்வாகனம்புரம் மவி போன்ற இடங்களில் தங்கியுள்ளனர் என கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன் தெரிவித்தார்.
அத்தோடு பிரமந்தனாறு பகுதிகளில் இதுவரை (22 காலை வரை) கிடைத்த தகவல்களின் படி 18 மாடுகள் 150 க்கு மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.