மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய வேண்டும் என்று 2009 மே 19ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆசைப்பட்டத்தை இப்போது நிறைவேற்ற மேற்கத்தேய நாடுகள் முயற்சிப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை அகுரஸ்ஸயில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இதற்காகவே, ரணிலின் பிரதமர் பதவியை விடவும், சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் காப்பாற்ற அந்த சக்திகள் ஒன்றிணைந்து போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலகம் அணிதிரண்டு, பிரபாகரனைக் காப்பாற்ற விரும்பியதாகவும் அதற்காக அமெரிக்க விமான மற்றும் கடற்படை அதற்கு தயாராக இருந்தபோதும் முல்லைத்தீவினை நோக்கி படையெடுப்போம் என முதுகெழும்புடன் தீர்மானம் எடுத்த ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ச என்றும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறான ஒரு தலைவரே, நாடு குறித்து சிந்தித்து பதவியை விட்டுக்கொடுத்துள்ளதாகவும் இப்போது அவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து மாத்திரம் அல்ல, மஹிந்தவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் அகற்றவே முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
ஏன் இந்த வைராக்கியம்? மஹிந்த இந்த நாட்டிற்கு என்ன பாவம் செய்தார்? என கேள்வி எழுப்பிய டளஸ் அழகப் பெரும, மகிந்தவை சிறையில் அடைத்து, கொலைசெய்து, ஓரத்தில் தூக்கிவீசும் பிரபாகரனின் தேவையே இது என்றும் குறிப்பிட்டார்.
2009 மே 19ஆம் திகதி அதிகாலை முடிவடைந்த யுத்தத்தில், பிரபாகரன் எதனைச் சிந்தித்தாரோ, எதனை யோசித்தாரோ அதற்கு உயிர்கொடுக்கவே இவ்வாறு முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து காப்பாற்ற, முயற்சித்ததை விடவும், சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் காப்பாற்ற மேற்கத்தேய சக்திகள் ஒன்றிணைந்து போராடுவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்