இரட்டைக் குடியுரிமை குறித்து தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவித்ததாவது
கூட்டமைப்பின் நான் உட்பட மூன்று பாராளுமன்ற உறுப்பினருக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளது எனவும் அது தொடர்பில் உச்சநீதிமன்றத்தை நாடி குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவியை இல்லாமலாக்குவோம் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறான இரட்டைக் குடியுரிமை எனக்கு மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எவருக்கும் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றேன்.
அண்மைக்காலமாக எனது நடவடிக்கையால் மிகவும் நொந்துபோயுள்ள மகிந்த அணியினர் என் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளால் அதிகம் விமர்சிக்கப்படுபவராக நான் உள்ளேன்.
இதனால் தான் இவ்வாறான பொய்யான பிரசாரங்களை என் மீதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன் என கூறினார்.
பாறுக் ஷிஹான்