சைக்கிள் திருட்டு
பருத்தித்துறை நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த இளைஞர் ஒருவரை பருத்தித்துறை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். பருத்தித்துறை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீதி சோதனை நடவடிக்கைகளில் காவற்துறையினர் ஈடுபட்டு இருந்த வேளை இளைஞர் ஒருவர் துவிச்சக்கர வண்டியில் இன்னொரு துவிச்சக்கர வண்டியை இழுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
அதன் போது குறித்த இளைஞரை காவற்துறையினர் சந்தேகத்தில் மறித்த போது இரண்டு துவிச்சக்கர வண்டிகளையும் வீதியில் கைவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தப்பியோடியவரை காவற்துறையினர் துரத்தி பிடித்து விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த துவிச்சக்கர வண்டியை களவாடி வந்தமை தெரியவந்துள்ளது.
அதையடுத்து காவற்துறை நிலையம் கொண்டு செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது, தான் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர் எனவும், துவிச்சக்கர வண்டிகளை திருடி விற்று வந்ததாகவும் காவற்துறை விசாரணைகளில் தெரிவித்துள்ளார் அத்துடன், விசாரணைகளின் போது கூறிய தகவல்களை கொண்டு காவற்துறையினர் 09 துவிச்சக்கர வண்டிகளை மீட்டுள்ளனர்.
குறித்த நபரை பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில், முற்படுத்திய போது எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
அதேவேளை குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்ட 09 துவிச்சக்கர வண்டியில் 02 துவிச்சக்கர வண்டிகளே அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், ஏனையவை அடையாளம் காணப்படவில்லை எனவும், தெரிவித்த காவற்துறையினர் துவிச்சக்கர வண்டிகள் களவு போனவர்கள் தமது துவிச்சக்கர வண்டிகளை அடையாளம் காட்டுமாறு கோரியுள்ளனர்.
சங்கிலி திருட்டு
யாழ்.போதனா வைத்திய சாலையில் நோயாளிகளிடம் தங்க நகைகளை திருடிய குற்றசாட்டில் வைத்திய சாலை நிர்வாகத்தினரால் பிடிக்கப்பட்டு காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பெண் மீண்டும் வைத்திய சாலையில் தனது திருட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு செல்வோரின் தங்க நகைகள் களவாடப்படுவது தொடர்பில் வைத்திய சாலை நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றன.
அது தொடர்பில் வைத்திய சாலை வளாகத்தினுள் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கமராக்களின் (CCTV) உதவியுடன் நகைகளை திருடி வந்த பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டார். அவரை வைத்திய சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் துணையுடன் வைத்திய சாலை நிர்வாகம் பிடித்து வீடியோ ஆதரத்துடன் யாழ்ப்பாண காவற்துறையினரிடம் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வைத்திய சாலைக்கு சென்ற வயோதிப பெண்ணொருவரிடம் இருந்து சங்கிலி ஒன்று களவாடப்பட்டு உள்ளது. அது தொடர்பில் குறித்த வயோதிப பெண் வைத்திய சாலை நிர்வாகத்திடம் முறையிட்டார்.
அதனை அடுத்து கண்காணிப்பு கமராக்களை பரிசோதித்த போது, முன்னர் வைத்திய சாலையில் நகைகளை திருடிய குற்றசாட்டில் தம்மால் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்ணே மீண்டும் திருட்டில் ஈடுபடுவதனை நிர்வாகத்தினர் கண்டறிந்தனர். அது தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினருக்கு அறிவித்தனர்.