சோதனைக்காக முச்சக்கர வண்டியை காவற்துறையினர் மறித்த போது காவற்துறையினரை மோதி தள்ளி, காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவருக்கு காயத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற முச்சக்கர வண்டி சாரதியை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக வீதி சோதனை நடவடிக்கையில் நெல்லியடி காவற்துறையினர் நேற்றைய தினம் மாலை ஈடுபட்டு இருந்தனர். அதன் போது வீதியால் வந்த முச்சக்கர வண்டியினை காவற்துறையினர் மறித்துள்ளனர்.
சாரதி முச்சக்கர வண்டியை நிறுத்தாது மறித்த காவற்துறை உத்தியோகஸ்தரை மோதி தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அதன் போது அங்கு கடமையில் இருந்த ஏனைய காவற்துறையினர் முச்சக்கர வண்டியை துரத்தி பிடித்து சாரதியை கைது செய்தனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த காவற்துறை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சாரதியை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.