சபரிமலையில் இன்று அதிகாலையில் 40 வயதுகளில் உள்ள இரு இளம்பெண்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பினர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்ட போதும் பின்னர் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேரும் சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் சபரிமலைக்கு நேற்று சென்ற போதும் அவர்கள் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் திரும்பியிருந்தார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை இரு பெண்கள் அதிகாலை சபரிமலைக்கு காவல்துறையின் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலையில் அனைத்துப் பக்தர்களும் செல்லும் 18 படிகள் வழியாகச் செல்லாமல், பின்புறம் உள்ள பகுதியினூடாக சென்று அவர்கள் வழிபட்டு விட்டு திரும்பியுள்ளனர். இதேவேளை சபரிமலையில் உள்ள பாரம்பரிய வழிபாட்டு விதிமுறைகளை மீறி, பெண்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்து சன்னிதானம் மூடப்பட்டுள்ளதுகோவிலை சுத்தம் செய்து பரிகார பூஜை செய்த பிறகு நடை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.