உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து ஆதார் எண்களைப் பலப்படுத்துவதற்கான ஆதார் திருத்த மசோதா மக்களவையில் ஒன்றிய அரசினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆதார் அட்டைகள் அரசியல் சட்டப்படி செல்லும் என்ற போதிலும் எல்லாத் திட்டங்களுக்கும் ஆதாரைக் கட்டாயப்படுத்தக் கூடாது என கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும், ஆதார் தகவல்கள் திருடப்படுவதற்கு எதிரான பாதுகாப்பை அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்றையதினம் மக்களவையில் ஆதார் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆதார் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாகத் தனியார் நிறுவனங்களின் விதிமீறல்களைத் தடுக்க இயலும். விரைவில் தரவுப் பாதுகாப்பு மசோதாவையும் பாராளுளுமன்றத்தில் தாக்கல் செய்வோம் என ஒன்றிய சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதும் சுமார் 123 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 6.71 கோடிப் பேருக்கும், ஐந்து வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 29.02 கோடிப் பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார்.