ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லாவை நியமித்திருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான பழி தீர்க்கும் நடவடிக்கையே என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப. அரியனேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், தற்போது ஆளுநர்களை நியமிக்க வேண்டிய தேவை இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், ஜனாதிபதி தனது தேவைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் சிறுபான்மையினரை சேர்ந்த எவரும் ஆளுநராக நியமிக்கப்படவில்லை எனவும் அப்படி ஒரு எண்ணம் ஜனாதிபதிக்கு இருந்திருந்தால், 2015இலேயே அதை செய்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
52 நாட்களாக நாட்டில் இடம்பெற்ற அரசியல் சிக்கலின்போது, ஜனாதிபதி பிரதமர் நியமனம் தொடர்பில் எடுத்த தன்னிச்சையான செயற்பாடுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டமைக்கு பழி தீர்க்கும் செயற்பாடே இது எனவும் இந்த நியமனம் பல சந்தேகங்களை எழுப்பியுளுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இந்து ஆலயம் அகற்றப்பட்டமை, இரத்த ஆறு ஓடும் என எச்சரித்தமை போன்ற பல்வேறு காரணங்களால் ஹிஸ்புல்லா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிழக்கில் தமிழ் – முஸ்லீம் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சியாகவும் இதனைப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள ப. அரியனேந்திரன் தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை, கிழக்கில் தமிழ் மக்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படாமல் இருந்தல் போன்ற நல்ல விடயங்கள் நடைபெற்றால் அதுவே சிறப்பாக இருக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.