தமது காணிகளை விட்டு இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இராணுவ வசமுள்ள விவசாய நிலங்களை விடுவிக்குமாறு கோரி, செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் இராமியன்குளம் மக்கள் நேற்று இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.
தலைமன்னார், மதவாச்சி முதன்மை வீதியில் இராமியன்குளம் பகுதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘இராணுவம் நாட்டை பாதுகாப்பதற்கா எமது காணியில் விவசாயம் செய்வதற்கா, அகதிகளிற்கு இடம்கொடுத்தோம் நாம் அகதிகளாகினோம், சொந்தநிலத்தில் வாழவிடு, இராணுவமே வெளியேறு போன்ற கோசங்களை மக்கள் எழுப்பியிருந்தனர்.
போராட்டத்தின் நிறைவில் செட்டிகுளம் பிரதேச செயலார் க.சிவகரனிடம் மனுவினைக் கையளித்துள்ள அவர்கள் தமது விவசாய காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருப்பதால் தமது வாழ்வாதரமும் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.