இலங்கையைப் பொறுத்த வரையில் பௌத்தம்தான் முதன்மையான மதம் எனவும் அதுவே இலங்கையின் ஆணிவேர் எனவும் தெரிவித்துள்ள கொழும்பு பேராயர் மெல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகை சர்வதேசத்தின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தேவைப்பட்டால் மட்டும் சர்வதேசம் நாட்டுக்கு உதவிகளை செய்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மட்டத்தில் இலங்கையானது, மிகவும் மோசமான ஒரு நாடாக தற்போது சித்தரிக்கப்படுவதாகவும் சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் நற்பெயருக்கும் நன்மதிப்புக்கும் தீங்கு விளைவிக்கும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தற்பொழுது ஐரோப்பிய நாடுகளில் தான் அதிகமாக வசித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் நாட்டுக்குள் ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை என்ற அச்சத்தை சர்வதேசத்துக்கு காண்பிக்க முயற்சிகள் இடம்பெறுவதாகவும் இது கவலைக்குரிய ஒரு விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை ஒரு மரமாக எடுத்துக்கொண்டால் அந்த மரத்தின் ஆணி வேராக பௌத்தத்தைத் தான் கருத வேண்டும் எனவும் இந்த ஆணி வேருடன் இணைந்த கிளை வேர்களாக ஏனைய மதங்கள் காணப்படுவதாகவும் இவையணைத்தும் நாட்டில் ஐக்கியமாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்தின் பிரிவினைவாதம் எனும் ஆயுதத்தை அனுமதிக்க முடியாது எனவும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி, நாட்டுக்குள் ஒருவருக்கொருவர் சர்ச்சைகளில் ஈடுபட்டுக்கொள்ள சர்வதேச நாடுகள் வழியமைக்கக்கூடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
1 comment
பஞ்ச ஈஸ்வரங்கள் என்பன சிவபெருமானுக்காக இலங்கையில் கட்டப்பட்டுள்ள கோவில்களாகும். இவ்வீஸ்வரங்கள் நாட்டின் கரையோரப் பகுதிகளில் ஒவ்வொரு திசையிலும் அமைந்திருக்கின்றன.
கிரிமலையில் உள்ள நகுலேஸ்வரம், மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம், திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம், புத்தளத்தில் உள்ள முநீஸ்வரம் மற்றும் மாத்தறையில் உள்ள தொண்டேஸ்வரம் என்ற கோவில்கள் புத்தர் பிறக்க முதல் கட்டப்பட்டவை.
புத்தர் பிறக்க முன் தொடங்கி இன்று வரை இலங்கையை சிவ பூமி என்று தமிழர்கள் அழைத்துக்கொண்டு வருகின்றார்கள்.
சமீபத்தில் இலங்கை அரசும் சமய வரலாறு தெரியாதவர்களும் இலங்கையை புத்த நாடு என்று அழைத்து பிரச்சாரம் செய்கின்றார்கள்.
தற்போது உள்ள ஸ்ரீ லங்கா ஒரு பல கலாச்சார நாடு. அனைத்து மதங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்.