குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதூர் பகுதியில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். புதூர் பகுதியில் கடந்த முதலாம் திகதி இரவு காவல்துறையினரைக் கண்டதும் தனது கையில் இருந்த பையை தூக்கி எறிந்து விட்டு நபரொருவர் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றிருந்தார்.
வீசி சென்ற பையினை சோதனையிட்ட கனகராஜன் குள காவல்துறையினர் அதிலிருந்து கைத்துப்பாக்கி , 4 கிரனைட்கள் , 2 கைத்தொலைபேசிகள் , உள்ளிட்ட பொருட்களை மீட்டிருந்தனர்.
அதனை அடுத்து மறுநாள் 2ஆம் திகதி இராணுவத்தினர் , காவல்துறையினர் , காவல்துறை விசேட அதிரடி படையினர் , புலனாய்வாளர்கள் என பலரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டு அப்பகுதியில் தேடுதல் நடாத்திய போதும் எவரும் கைது
செய்யப்பட்டவில்லை.
இந்நிலையில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , வீட்டில் வேட்டை துப்பாக்கி வைத்திருந்த குற்றசாட்டில் 20 வயதான ஜெகதீஸ்வரன் கஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை வீட்டுக்கு விசாரணைக்கு காவல்துறையினர் சென்ற சமயம் கணவர் வீட்டில் இல்லை எனவும் , கணவர் எங்கே போனார் என தெரியாது எனவும் தெரிவித்த பத்து வயது பெண் பிள்ளையின் தயாரான 35 வயதான ஸ்ரீகாந்த் தர்சினி என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவரது 10 வயது மகளையும் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.
அத்துடன் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் நெடுங்கேணி பகுதியை சேர்ந்த கார்த்திக் எனும் இளைஞனையும் கைது செய்துள்ள காவல்துறையினர் மூவரிடமும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.